நடிகர் விவேக் காலமானார் – 59 வயது 19.11.1961 - 17.04.2021 | NPM

 மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் (வயது  59) காலமானார்.



நடிகர் விவேக்கின் உடல் சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

விவேக்கின் வீட்டில் அஞ்சலி செலுத்த ரசிகர்களும் திரை பிரபலங்களும் குவிந்துள்ளனர்.

விவேக் உடலுக்கு திரை உலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

*****

நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்.

நடிகர் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

தனது ஈடு இணையற்ற கலை சேவையாலும், சமூக சேவையாலும் தமிழகத்துக்கு பெருமை சேர்ந்தவர், நடிகர் விவேக்.

- முதலமைச்சர் பழனிசாமி

*****

சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது.

பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்; கருணாநிதியிடம் தனி அன்பு கொண்டவர், நடிகர் விவேக்

- திமுக தலைவர் ஸ்டாலின்.

*****

நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி மனதை கலங்கச் செய்கிறது. ஹீரோக்கள் ஜோக்கர்களாக அம்பலப்பட்டு நிற்கும் இந்த காலத்தில் சமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் ‘நாயகனாக உயர்ந்தவர். அவருக்கு என் அஞ்சலி!

- ரவிக்குமார் எம்.பி.

*****

அருமையான நடிகர். அதைவிட அருமையான மனிதர். சமுதாய அக்கறை கொண்ட மாமனிதரை இழந்துவிட்டோம். நான் மற்றும் திரை உலகமும் பேரதிர்ச்சியில் உள்ளோம். வாழந்த காலத்தில் மக்களை மகிழ்வித்தது மட்டும் அல்லாமல்  பல நல்ல கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. இருப்பினும் வாழ்க்கை எனும் நாடகத்தில் திறம்பட வாழந்த ஒரு நல்ல ஆன்மா என்பது ஆறுதல். என் அருமை நண்பா , பூலோகத்தில் ஆற்றிய சேவையை சொர்கத்திலும் தொடர்வாய் என்று நான் அறிவேன். ஆன்மா சாந்தியடையட்டும்.

- Y Gee Mahendra

*****

என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன்  விவேக்கின் மரண செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு.

அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

- சீயான் விக்ரம்.

*****

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் விவேக் நடித்துள்ளார்.

சமூக சீர்திருத்த கருத்துகளை கூறி நடித்ததால் சின்னக் கலைவாணர் என்ற பட்டமும் நடிகர் விவேக்கு உண்டு.

5 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை பெற்றுள்ளார்.

ரன், சாமி, பேரழகன் படங்களுக்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார் விவேக்.

1987-ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையுடன் சேர்ந்து சமூகக் கருத்துக்களையும் தொடர்ந்து பேசிவந்தவர்.

அதனால் 'சின்னக் கலைவானர்' என்ற பெயரையும் பெற்றார்.

2000-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விவேக்.

இதுவரை 2020-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2009-ம் ஆண்டு பத்ப ஸ்ரீ விருதைப் பெற்றவர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த அவர், மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார்.

*****

நடிகர் விவேக்!

1961 ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் சேர்ந்த சிவ.அங்கய்யா பாண்டியன்,  மணியம்மாள்  தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.

இவருடைய முழு பெயர் விவேகானந்தன். இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.

மதுரையில் உள்ள  அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்ற இவர், அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார். சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப் பார்த்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் நான்கு தேர்வில் வெற்றிப் பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைக்க,  அவருடைய இயக்கத்தில் உருவான  ‘மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர் மீண்டும் கே.பாலசந்தர் இயக்கிய ‘புது புது அர்த்தங்கள் படத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

‘ஒரு வீடு இரு வாசல், ‘புது மாப்பிள்ளை, ‘கேளடி கண்மணி, ‘இதய வாசல் ‘புத்தம் புது பயணம் எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள், சாமி போன்ற படங்களில் நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைத்தார்

லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இவருடைய நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றன.

தமிழில் அனைத்து முன்னணி கதாநாயகர்களின்  படங்களிலும் நடித்துள்ள இவரை, பஞ்சு படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்தார் கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை.

சொல்லி அடிப்பேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் பொருளாதார நெருக்கடிகளால் வெளியாகாத போதும் அதன் பிறகு விவேக் நாயகனாக நடித்த ’நான்தான் பாலா, ’பாலக்காட்டு மாதவன் போன்ற படங்கள் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வந்த விவேக், சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு, ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன் எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி வந்தார்.

சினிமா ரசிகர்கள் இவரை ‘சின்னக் கலைவாணர் என்றும், ‘மக்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

‘உன்னருகே நானிருந்தால், ‘ரன், ‘பார்த்திபன் கனவு, ‘சிவாஜி போன்ற திரைப் படங்களுக்காக தமிழ் நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

2002-ல் ‘ரன், 2003ல் ‘சாமி, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி போன்ற திரைப் படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார் இவர்.

ஆரம்பத்தில் படங்கள் இல்லாத போது மேல்மாடி காலி என்கிற சின்னத்திரை நாடகத்தில் நடித்திருக்கிறார்.

இவரது மனைவி பெயர் அருள்செல்வி.

இவருக்கு அம்ரிதாநந்தினி, தேஜஸ்வினி என்கிற இரு மகள்களும் உள்ளனர்.

பிரசன்ன குமார் என்கிற ஒரு மகன் இருந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு முன் உடல்நல குறைவால் காலமானார்.

*****

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM